Skills for Inclusive Growth

Skills for Inclusive Growth (இயைந்த வளர்ச்சிக்கான திறன்கள்) திட்டமானது அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய இலங்கையின் நான்கு மாவட்டங்களில் நிலையான வேலைவாய்ப்புகளின் உருவாக்கம் மற்றும் வியாபார அபிவிருத்திக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம், உள்ளூர் சமூகங்களில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும், இலக்குசார்பான, நெகிழ்வான திறன் அபிவிருத்திப் பயிற்சிகளின் மூலம் தற்போதுள்ள தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.

உணவு மற்றும் குடிபான வழங்குனர்கள், சுற்றுலாப் பயணங்கள், பொழுதுபோக்கு மற்றும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகள், தேசிய பூங்காக்கள், அழகுக்கலை மற்றும் உடல்நலம் தொடர்பான சேவைகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சுற்றுலாத்துறை மதிப்புச் சங்கிலியிலான திறனபிவிருத்தியினை இத்திட்டமானது ஊக்கப்படுத்துகின்றது. சுற்றுலாத்துறையிலான திறனபிவிருத்தியானது, வளர்ச்சியடைந்துவரும் சுற்றுலாத்துறைச் சந்தைத் தேவைகளை தனிநபர்கள் மற்றும் வியாபார முயற்சிகள் வாயிலாகப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக அமைகின்றது.

Skills for Inclusive Growth மூலம் குறிப்பாக, முறைசாரா துறைகளிலுள்ள வறிய மக்களுக்கு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. பெண்கள் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தொழில்சார் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளில் கவனம் செலுத்தும் இந்த வேலைத்திட்டமானது, அத்தகையோர் தமது வாழ்வாதாரத்தினை சுயமாகத் தேடிக்கொள்வதை அல்லது மேம்படுத்துவதை உறுதிசெய்கின்றது.

Skills for Inclusive Growth திட்டத்தின் மூலம், வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெருமளவிலான ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் என்ற வகையில் சுற்றுலாத் துறையினால் நன்மையடைகின்றனர்.

சுற்றுலாத் துறை தெரிவுசெய்யப்பட்டதன் பின்னணி என்ன?

இலங்கைப் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பினை சுற்றுலாத் துறையானது தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. 2010 இல் வருகைதந்த 654,476 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகமாகும் (2,050,832). [1]

குறிப்பாக, கலாசார பொக்கிஷங்கள், அழகிய கடற்கரைகள் மற்றும் பல்வேறு கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கொண்டுள்ள இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பொருளாதாரங்கள் சுற்றுலாத் துறை மூலம் மென்மேலும் நன்மையடையக் கூடும். உள்நாட்டு யுத்தத்திற்கு முந்திய காலப்பகுதியில், இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரமானது மிகவும் பிரபல்யமான ஒரு சுற்றுலாத் தளமாகக் காணப்பட்டது. சுற்றுலாத் துறை அபிவிருத்தியானது, தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், அந்நியச் செலாவணியினை ஈட்டுதல், தொழில் துறைகளுக்கிடையிலான தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற நன்மைகளுடன், பரந்த அடிப்படையிலான பிராந்திய மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்திக்கும் வழிவகுக்கின்றது. அத்தோடு, சமாதானம், செளபாக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பிரதானமான ஊக்கியாகவும் சுற்றுலாத் துறை கருதப்படுகிறது.

[1] இலங்கை சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை ASR, சுற்றுலாத் துறை வருடாந்த அறிக்கை 2016

திட்ட அமுலாக்கம்

Skills for Inclusive Growth திட்டத்தின் மூலம், இயைபானதும், தனியார் துறையினை அடிப்படையாகக் கொண்டதுமான பொருளாதார அபிவிருத்தியின் வாயிலாக வறுமையினைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டமானது, ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் Economic Opportunities for the Poor செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகும்.

Skills for Inclusive Growth திட்டத்தினை ஆஸ்திரேலிய அரசாங்கமானது இலங்கையின் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகத் திறன் அபிவிருத்தி நிதியானது காணப்படுகிறது. Skills for Inclusive Growth திட்டத்தினை நிர்வகிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமென ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தகத்திற்கான திணைக்களத்தினால் Scope Global நியமிக்கப்பட்டுள்ளது. Skills for Inclusive Growth ஆனது, நிகழ்நேர அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் மதிப்பாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு செயற்றிட்டமாகும். இது தொடர்பான அண்மைய விபரங்களுக்கு எமது தலைமை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும்.