Skills for Inclusive Growth prioritises economic opportunities for women.

Skills for Inclusive Growth பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு முன்னுரிமை அளிக்கின்றது.

இத்திட்டமானது, சுற்றுலாத் துறையில் பெண்கள் எதிர்நோக்கும் திறன் இடைவெளிகளை அடையாளப்படுத்துவதன் மூலம், அவர்கள் தொழிற் துறை கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவும், சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவும் ஆதரவளிக்கின்றது.

தொழிற் துறை திறன்கள் மற்றும் வியாபார முகாமைத்துவத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், பெண்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும், வருமான மார்க்கங்களை அதிகரிப்பதன் மூலம் தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் வாய்பேற்படுகிறது. ஆஸ்திரேலியாவின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் தொடர்பான மூலோபாயமானது, இத்திட்ட அமுலாக்கத்தின் மூலம் அனைத்து பாலினங்களையும் உள்ளடக்கிய நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கின்றது.

பெண்களுக்கான வேலைவாய்ப்பு

இலங்கையின் பொருளாதாரமானது வளர்ச்சிப் பாதையினை நோக்கி பயணிக்கும் போதிலும், உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2010 ஆம் ஆண்டு இலங்கையின் தொழிலாளர் படையில் 41% ஆக இருந்த பெண்களின் பங்களிப்பானது 2016 ஆம் ஆண்டில் 36% ஆகக் குறைவடைந்துள்ளது. அத்தோடு, பெண்களில் 8% ஆனோர் சிறிய தொழில் நிறுவனங்களைக் கொண்டுள்ளதுடன், 5% ஆனோர் மாத்திரமே பாரிய நிறுவனங்களின் உரிமையாளர்களாகக் காணப்படுகின்றனர்.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ஊதியம் பெறும் தொழிலாளர்களில் 20% ஆனோர் மாத்திரமே பெண்களாவர். பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 14% ஆன பெண்களே ஊதியம் பெறும் தொழிலாளர்களில் அடங்குகின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் தற்காலிகமான வேலைகளில் ஈடுபடுவதால் குறைந்த ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பின்மை போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

Skills for Inclusive Growth இனால் குறித்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 35 தொடக்கம் 51% வரையான நிறுவன உரிமையாளர்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஆர்வமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும் அவர்களில் பலரும், பெண்களை வேலைக்கமர்த்துவதில் பல்வேறு சமூக மற்றும் கலாசார ரீதியிலான சிக்கல்கள் இருப்பதாகக் கருதுகின்றனர். இளம் பெண்பிள்ளைகளுக்கு சுற்றுலாத் துறையில் காணப்படும் நிரந்தரமான வேலைவாய்ப்புகள் மற்றும் அவற்றின் பொருத்தப்பாடு பற்றி பெரும்பாலான பெற்றோர் கவலை கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண்களின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களித்தல்

Skills for Inclusive Growth அதன் அனைத்து செயற்றிட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பினை ஊக்கப்படுத்துகிறது.

இத்திட்டமானது பெண்களின் திறன் அபிவிருத்திக்கு உதவும் அனுபவம் வாய்ந்த வளவாளர் குழாமின் சேவைகளை விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றது. திறன் அபிவிருத்தி நிதியின் மூலம் கட்டமைக்கப்பட்ட புதிய திறன் அபிவிருத்திப் பயிற்சிகள் அனைத்தும், பயனாளர்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பாரம்பரியமான TVET திட்டங்களில் பங்கேற்காத குறைந்த வசதியுடைய பெண்கள் (பெண் குடும்பத் தலைவர்கள் உள்ளடங்கலாக) திறன் அபிவிருத்திப் பயிற்சிகளுக்கு உள்வாங்கப்பட வாய்ப்பேற்படுகிறது.

Skills for Inclusive Growth ஆனது மகளிர் அமைப்புகள், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன், சுற்றுலாத் துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய துறைகளில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.

சுற்றுலாத் துறையுடன் நெருக்கமாக செயல்படுவதன் மூலம், Skills for Inclusive Growth பரந்துபட்ட பொருளாதாரத் தேவைகளுக்கமைவாக திறன் அபிவிருத்திப் பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. அத்தோடு, சிறிய வியாபாரங்கள் மற்றும் சுய தொழில் முயற்சிகளில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் தனியார் துறையைச் சேர்ந்த வளவாளர்கள் மற்றும் பயிற்றுனர்களுடனும் இத்திட்டமானது பணியாற்றி வருகிறது

எம்மோடு இணைந்துகொள்ளுங்கள்

சுற்றுலாத் துறையில் பெண்கள் உள்வாங்கப்படுவதற்கு உதவும் பாலின சமத்துவத்தை பேணும் வகையிலான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான புத்தாக்கமான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் திறன் அபிவிருத்தி நிதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வசிக்கும் சுற்றுலாத் துறையிலான தொழில்வாய்ப்புகளில் ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் enquiries@inclusivegrowth.com.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்புகொள்ளவும்.